பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் மலைப்பகுதி தலிபான்கள் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அவர்கள் தனி ஆதிக்கம் நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டுள்ளது. அப்பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை வீசி அழித்து வருகிறது.
இருந்தும் அவர்களை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. அவர்களுக்கு பாகிஸ்தான் அரசின் மறைமுக ஆதரவு இருப்பதே காரணம் என அமெரிக்கா கருதுகிறது. இந்நிலையில், வடக்கு வசிரிஸ்தானின் தலிபான் கமாண்டர் நசிருதீன் ஹக்கானி என்பவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளது. இவர் தலிபான் கமாண்டர்களின் தலைவர் ஆவார். இவர் வெளிநாடுகளில் இருந்து தங்கள் அமைப்புக்கு பணம் வசூலிக்கும் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார்.
இவர் பெஷாவரில் இருந்து வடக்கு வசிரிஸ்தானுக்கு 4 தீவிரவாதிகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ராணுவத்தினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள நசிருதீன் ஹக்கானி தலிபான்களின் முக்கிய தலைவர் ஜலாலுதீன் ஹக்கானியின் மகன்.
அமெரிக்காவின் நெருக்கடியால் தான் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற கருத்து நிலவுகிறது. இதற்கிடையே, நசிருதீன் ஹக்கானி கைது செய்யப்பட்ட தகவலை பாகிஸ்தான் அரசு இதுவரை வெளியிட வில்லை. ரகசியமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment