இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அரசுடன் பேச்சு நடத்துவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் தெரிவித்ததன் அடிப்படையில் பேச்சு நடக்கப்போகிறது என்ற பிரமை தமிழ் மக்களை ஆட்கொள்ளத் தொடங்கியுள்ளது.
இதனை மேலும் வலியுறுத்துவதாக, இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து அதனோடு தொடர்புடைய சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், பதின்மூன்றாவது திருத்தச் சட்ட மூலத்தை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் ஹெகலிய கூறிய விடயம் சர்ச்சைக்குரியது என்பதில் சந்தேகமில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துத் தங்களுடன் மட்டுமே பேசப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்துக் கூறி வருகின்றது.
அதேநேரம் இனப் பிரச்சினைக்காக தீர்வு பற்றித் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடன் அரசு பேசும் என அந்தக் தரப்பு நம்புகிறது. ஆக, இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசு யாருடன் பேசும் என்பதைப் பொறுத்தே எதிர்காலத்தில் தமிழ் மக்களின் வாக்குகளைக் கவர முடியும் எனத் தமிழ்த்தரப்புக் கருதுவதால் இப்படியொரு பிரசாரம்.
ஆனால், அரசு அதிரடியாக ஓர் அறிவித்தலை விட்டிருக்கின்றது. இந்த அறிவித்தல், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவருடனும் பேச்சு நடத்தப்படும் என்பதாகும்.
எங்களுடன்தான் அரசு பேச்சு நடத்தும் என்ற மாயப்பேயைக் காட்டித் தமிழ் மக்களை ஏமாற்றப் பார்த்தவர்களுக்கு அரசு உள்ளித் தைலம் வைத்துள்ளது. இது ஒருபுறம்.
மறுபுறத்தில் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய சகல தரப்புடனும் பேச்சு நடத்தப்படும் என்றால், அந்த விரிபரப்பின் எல்லை எங்கே முற்றுப்பெறும்?
இனப்பிரச்சினையோடு தொடர்புடையவர்கள் என்றால் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மும் தொடர்புடையவர் அல்லவா?
ஏன்? இந்தியாவின் ரொமேஸ் பண்டாரியும், ஐ.நாவின் விஜய் நம்பியாரும் இனப்பிரச்சினையோடு தொடர்புடையவர்கள்தான். எப்படி பேச்சுவார்த்தை சாத்தியமாகும்?
இது பற்றித்தான் தமிழ்த்தரப்பு சிந்திக்க வேண்டும். இதை விடுத்து எங்களோடு… என்று மார் தட்டுவதில் எந்தப் பயனுமில்லை.