தங்களைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்துவதாக சக ராணுவத்தினர் மீது அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் 3 ஆயிரத்து 230 புகார்களை அளித்துள்ளனர்.
இது குறித்து அமெரிக்கப் பத்திரிகையாளரான தஹர் ஜமாயில் விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளார். இந்தப்பிரச்சனை ஒன்றும் புதிதல்ல என்று தனது ஆய்வறிக்கையிலேயே அவர் குறிப்பிடுகிறார். ஆனால், 2009 ஆம் ஆண்டில் இது ஒரு பெரும் பிரச்சனையாக மாறி விட்டது. பாலியல் கொடுமைகளை 2008 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது 2009 ஆம் ஆண்டில் 11 விழுக்காடு அதிகரித்தது என்கிறார் அவர்.
அவரது ஆய்வு பல அதிர்ச்சிகளை வெளிக் கொண்டு வந்துள்ளது. அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றுகையில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானோம் என்று மூன்றில் ஒரு பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால், அமெரிக்க சிவில் சமூகத்தில் நடப்பதைவிட, இரண்டு மடங்கு அதிகமான அளவில் அமெரிக்க ராணுவத்தில் பாலியல் கொடுமைகள் நடந்து வருகின்றன.
இந்தக் கொடுமைகள் பற்றி அமெரிக்க சமூக ஆர்வலர்கள் கடுமையான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு போர் புரிவதற்காகச் செல்லும் பெண் இராணுவத்தினர், போரில் குண்டு துளைத்து கொல்லப்படுவதை விட, சக ஆண் இராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் வாய்ப்புகள்தான் அதிகம் என்று அவர்கள் கூறுகிறார்கள். பாலியல் தொந்தரவுகள் மற்றும் வன்முறைகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன என்று அமெரிக்க இராணுவத்தலைமையகமான பென்டகன் நடத்திய ஆய்விலேயே தெரிய வந்துள்ளது.
அமெரிக்க இராணுவத்திற்குள் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த விபரங்களை வெளியிட இராணுவத் தலைமையகம் மறுத்து வருகிறது. இதற்கு எதிராக அமெரிக்க சிவில் உரிமைகள் கழகம் உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புகள் வழக்குத் தொடுத்தன. பாலியல் பலாத்காரம், பாலியல் தொல்லைகள் போன்றவை எந்த அளவுக்கு இராணுவத்திற்குள் நடக்கின்றன மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன ஆகிய விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று அந்த அமைப்புகள் கோரியுள்ளன. இந்த விபரங்கள் அடங்கிய ஆவணங்களை மறைப்பது சுதந்திரத் தகவல் சட்டத்திற்கு விரோதமானது என்று அந்த அமைப்புகள் குறை கூறியுள்ளன.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களால் அமெரிக்க இராணுவத்திற்கு கூடுதல் ஆட்கள் தேவைப்பட்டனர். இந்த ஆட்பற்றாக்குறையைப் பயன்படுத்தி குற்றப் பின்னணிகளைக் கொண்டவர்கள் கூட இராணுவத்திற்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பத்தாண்டுகளுக்கு முன்பு கிரிமினல்களாக இருந்தவர்கள் தற்போது அமெரிக்க ராணுவத்தினராகக் காட்சியளிக்கின்றனர் என்ற அதிர்ச்சியான தகவல்களையும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன
0 கருத்துரைகள்:
Post a Comment