Thursday, July 23, 2009

நானு’க்கு எதிரான ‘நாம்’


எகிப்தில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின்(NAM - நாம்) உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 118 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பின் குரலை, உலகம் அவ்வளவு எளிதில் நிராகரித்து விட முடியாது.

ஐக்கிய நாடுகள் சபை, பல்வேறு சந்தர்ப்பங்களில் அமெரிக்காவின் கண்ஜாடைக்கு ஏற்பவே செயல்பட்டு வரும் நிலையில், அணிசேரா நாடுகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போன்று, உலகவங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகிய சர்வதேச அமைப்புக்களின் கருத்துருவாக்கத்தில், வளர்முக நாடுகளுக்கு, உரிய பங்களிப்பு இருக்க வேண்டும், என்றும் மாநாடு வலியுறுத்தியுள்ளது.

உலக பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள சுமையை, வளர்முக நாடுகளின் தலையில் மட்டும் கட்டிவிடக் கூடாது என்றும் மாநாடு கேட்டுக் கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ள அதே வேளையில், பயங்கரவாதத்தை குறிப்பிட்ட மதம், தேசியம், பண்பாடு, இனம் ஆகியவற்றோடு தொடர்புபடுத்தக் கூடாது என்றும் அணி சேரா நாடுகளின் மாநாட்டு அறைகூவல் மிகச் சரியாக குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாதம் என்றாலே அதை, இஸ்லாமிய நாடுகளுடன் தொடர்புபடுத்தும், அமெரிக்காவின் பித்தலாட்டத்திற்கு எதிரானது இது.

25 நாடுகளுடன் துவங்கப்பட்ட அணிசேரா நாடுகள் அமைப்பில் தற்போது, ஆப்பிரிக்க நாடுகள் 53, ஆசிய நாடுகள் 26, லத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்க கண்டத்திலிருந்து தலா ஒரு நாடு என்று உலகின் விரிவானதொரு அமைப்பாக வலிமை பெற்றுள்ளது. ஏகாதிபத்திய நாடு கள், தங்களது சொந்த நலனுக்காக, தங்களுக்குள் முரண்பட்டாலும், வளர்முக நாடுகளைச் சுரண்டுவதில் கூட்டுச் சேர்ந்து கொள்கின்றன. இந்நிலையில், வளர்முக நாடுகளின் குரலாக விளங்குகிற அணிசேரா நாடுகள், மேலும் அர்த்தப்பூர்வமாக செயல்படுவது அவசியமாகிறது.

குறிப்பாக, உலகப் பொருளாதார நெருக்கடி, சுற்றுச்சூழல் பிரச்சனைகள், புவி வெப்பமயமாதல் போன்றவற்றில் பணக்கார நாடுகள், வளர்முக நாடுகளுக்கு எதிராக ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்ளும் நிலையில், வளர்முக நாடுகளிடையே ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் அவ சியமாகிறது. குறிப்பாக பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சீனா மற்றும் ஜி77 நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அணிசேரா நாடுகளின் அமைப்பு கூறியிருப்பது, மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

பன்முக உலகக் கோட்பாட்டிற்கு எதிராக, அமெரிக்க ஏகாதிபத்தியம், ஒற்றைத்துருவ உலகை உருவாக்க துடிக்கிறது. ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களை, தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து நாட்டாண்மை செய்ய முயல்கிறது. இதன், அடாவடிகளைத் தடுத்து நிறுத்த, வலுவான சோசலிச முகாம் இல்லாத நிலையில், வளர்முக நாடுகளின் கூட்டமைப்பாக விளங்கும், அணிசேரா நாடுகளின் அமைப்பு, மேலும் வலிமை பெறுவது அவசியமாகிறது.

உலகின் வல்லரசு “நானே” என்ற அமெரிக்காவின் அகம்பாவத்திற்கு எதிராக, “நாம்”-எனும் குரல் ஒலிக்கட்டும்!

நன்றி: தீக்கதிர்

Wednesday, July 22, 2009

தலைவர் ,சில நினைவுகள்


80களின் தொடக்கத்தில் தேசியத் தலைவர் அவர்கள் ஒரு முறை பொதுமக்கள் பிரயாணம் செய்யும் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார். போராட்டம் ஆரம்பமாகிய கால கட்டம் அது. “பிரபாகரன்” என்ற பெயர் அப்பொழுதுதான் மெது மெதுவாக பிரபல்யமாகிக் கொண்டிருந்தது. பிரபாகரன் என்பவர் எப்படி இருப்பார் என்பதைக் கூட சரியாக அறிந்திராத சிறிலங்காவின் காவல்துறை தேசியத் தலைவரை தேடி அலைந்து கொண்டிருந்தது.

தேசியத் தலைவர் பேருந்து ஒன்றில் பயணிக்கும் விடயம் சிறிலங்கா காவல்துறைக்கு தெரிந்து விட்டது. எந்தப் பேருந்தில் பயணிக்கிறார், என்ன உடை அணிந்திருக்கிறார் என்பதை எல்லாம் சரியாகத் தெரிந்து கொண்ட காவல்துறை பேருந்தில் ஏறி தேசியத் தலைவரை தேடியது. தேசியத் தலைவரின் இருக்கைக்கு முன்னால் அவரைப் போன்ற உடையணிந்திருந்த ஒருவர் அமர்ந்திருந்தார். அவர்தான் பிரபாகரன் என்று தவறுதலாக எண்ணிய சிறிலங்காவின் காவல்துறை அவரைக் கைது செய்து கொண்டு சென்றது.

இது அன்றைய காலத்தில் போராளிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு செய்தி.

இந்திய இராணுவத்தினரோடு நடந்த சண்டைகளிலும் தேசியத் தலைவரை இந்தியப் படையினர் பலமுறை நெருங்கியிருக்கிறார்கள். எத்தனையோ முறை தேசியத் தலைவர் அருகில் நிற்பது தெரியாமல் இந்திய இராணுவம் கடந்து சென்றிருக்கிறது.

சிறிலங்காப் படையின் வான்தாக்குதலில் வீரச் சாவடைந்த பிரிகேடியர் தமிழ் செல்வன் சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்றிற்கு ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். அதிலே அவர் கேட்பவர் மனம் பதைபதைக்கக் கூடிய ஒரு விடயத்தை சாதரணமாக வெளிப்படுத்தினார்.

இந்திய இராணுவம் தேசியத் தலைவரை இலக்கு வைத்து பெரும் தாக்குதல்களை முடுக்கி விட்டிருந்தது. இந்த நிலையில் தேசியத் தலைவர் பிரிகேடியர் தமிழ்செல்வனுக்கு ஒரு உத்தரவை வழங்கினார். எதிரியிடம் உயிரோடு அகப்படக் கூடாது என்ற உறுதியான முடிவில் இருந்த தேசியத் தலைவர், இன்னும் ஒரு முடிவையும் எடுத்திருந்தார். தன்னுடைய உடலையும் எதிரி கைப்பற்றக் கூடாது என்பதுதான் அது.

அதன்படி எதரியிடம் கிடைக்காதவாறு தன்னுடைய உடலை முற்று முழுதாக எரித்து விட வேண்டும் என்பதுதான் தேசியத் தலைவர் தமிழ்செல்வனுக்கு வழங்கிய உத்தரவு. அதன் பிறகு அந்த உத்தரவின் படி தேசியத்தலைவர் செல்கின்ற இடத்திற்கு எல்லாம் தமிழ்செல்வனும் ஒரு பெற்றோல் கலனுடன் சென்று வந்தார்.

இதை நினைத்துப் பார்க்கின்ற போதே மனம் சிலிர்க்கின்றது. தேசியத் தலைவரின் இந்த உத்தரவிற்கு காரணம் போராட்டத்தை தக்க வைப்பதுதான். தனக்குப் பின்பும் விடுதலை பெறும் வரை போராட்டம் தொடர வேண்டும் என்பதில் தேசியத் தலைவர் உறுதியாக இருந்தார்.

எதிரியிடம் அகப்படும் நிலையில் பலமுறை இருந்த தேசியத் தலைவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தால் எதிரியிடம் சிக்காது தப்பினார். எதிரியின் கவனக்குறைவைப் பயன்படுத்தி சில முறையும், தன்னுடைய மதியூகத்தால் சில முறையும், சண்டைகள் செய்து சில முறையும் தேசியத் தலைவர் எதிரிகளிடம் இருந்து தப்பித்துக் கொண்டார்.

இன்றைக்கு தேசியத் தலைவர் நிற்கும் பக்கமே எதிரிகளால் நெருங்க முடியாத அளவிற்கு விடுதலைப் புலிகள் பெரும் பலத்தோடு நிற்கிறார்கள். வேறு வழியில்லாத எதிரிகளும் கற்பனைகளில் தேசியத் தலைவரை சாகடித்து இன்பம் காண்கின்றனர். இப்படி தேசியத் தலைவரை கற்பனையில் சாகடிக்கும் பழக்கம் எதிரிகளுக்கு எப்பொழுது ஏற்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை.

1986ஆம் ஆண்டில் கொழும்பில் இருந்து வெளிவரும் “சண்” பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டது. விடுதலைப் புலிகள் சென்று கொண்டிருந்த ஒரு படகை சிறிலங்கா கடற்படை தாக்கி மூழ்கடித்ததாகவும், அதில் இருந்த அனைவரும் இறந்து விட்டார்கள் என்றும் அப் பத்திரிகையின் செய்தி கூறியது. செய்தி அத்துடன் முடிந்துவிடவில்லை. உடல்கள் அனைத்தும் கடலில் மூழ்கிவிட்டதாகவும், ஆனால் கடலில் மிதந்த ஒரு அடையாள அட்டையை கடற்படையினர் மீட்டிருப்பதாகவும், அந்த அடையாள அட்டையில் “வேலுப்பிள்ளை பிரபாகரன்” என்ற பெயர் இருந்ததாகவும் அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்திருந்தது.

அநேகமாக இதுதான் ஆரம்பமாக இருக்க வேண்டும். அதன் பிறகும் பல முறை எதிரிகள் தேசியத் தலைவரை தமது கற்பனையில் சாகடித்து விட்டார்கள்.

இந்தியப் படையினரின் காலத்தில் தேசியத் தலைவரின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள இடத்தை எல்லாம் சொன்னார்கள். சுனாமி வந்த பொழுது உடல் வைக்கப்படும் பேழையின் நிறத்தையும் பெறுமதியையும் சொன்னார்கள். கடந்த நவம்பரின் போது தேசியத் தலைவர் காயம் என்று கதை கதையாக சொன்னார்கள். அதன் பிறகு தேசியத் தலைவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். இடையில் அவருடைய மனைவியையும் இந்தியா அனுப்பி வைத்தார்கள். சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் தேசியத் தலைவரை தென்னாபிரிக்காவிற்கும் அனுப்பி வைத்திருந்தார்கள்.

இப்படி எதிரிகள் காணும் கனவிற்கு எந்த ஒரு வரைமுறையும்; இருப்பது இல்லை. கனவுகள் என்றவுடனேயே அவைகள் விதிகளுக்குள் உட்பட வேண்டிய அவசியம் இல்லாமலும் போய்விடுகிறது.

கடந்த வாரம் புதன் கிழமை தேசியத் தலைவர் தங்கியிருந்த முகாமை தாக்கி அழித்து விட்டதாக சிறிலங்கா அரசு செய்தி ஒன்றைப் பரப்பியது. இம் முறை இலக்குத் தவறவில்லை என்ற செய்தி படையினர் மத்தியில் உலாவந்து அது சிங்கள மக்கள் மத்தியிலும் பரவியது. பல சிங்களவர்கள் வெடி கொளுத்தியும், பால்சோறு பொங்கியும், மது அருந்தியும் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். கடைசியில் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று தெரிந்து ஏமாற்றம் அடைந்தார்கள்.

தேசியத் தலைவரை இலக்கு வைக்கும் முயற்சியில் சிங்கள அரசு தற்பொழுது தீவிரம் காட்டுவது போல் தெரிந்தாலும், இம் முயற்சி பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகின்ற ஒன்று. இன்னும் சொல்லப் போனால் பேச்சுவார்த்தைக் காலங்களிலும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதுதான் உண்மை. அப்பொழுது மிக ரகசியமான முறையில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்பொழுது வெளிப்படையாக அறிவித்து விட்டு முயற்சி செய்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

இம் முயற்சிக்கு சில வல்லரசு நாடுகளின் ஆதரவும் உள்ளது என்பது இதில் வெளிப்படையாக அறிவிக்கப்படாத ஒரு செய்தி.

இந்த வல்லரசு நாடுகள் தேசியத் தலைவரை அகற்றுவதன் மூலம் தமிழர் போராட்டத்தை இல்லாமல் செய்து விடலாம் என்று நம்புகின்றன. தமிழீழ விடுதலைப் போராட்டம் தேசியத் தலைவரை சுற்றி பின்னப்பட்டுள்ளதாக கருதுகின்ற இந்த நாடுகள் தேசியத் தலைவரை அகற்றும் நடவடிக்கைக்கு அனைத்து ஆதரவுகளையும் வழங்கி வருகின்றன.

இன்றைக்கு சிறிலங்காவிற்கு வழங்கப்படுகின்ற தொழில்நுட்ப உதவிகள் மிகப் நவீனமானவை. மிக இரகசியமான முறையில் வழங்கப்படுகின்ற இந்த உதவிகள் சிறிலங்காவிற்கு தன்னுடைய இலக்கை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஆனால் இந்த வல்லரசு நாடுகள் சில விடயங்களை வெகு இலகுவாக மறந்து விடுகின்றன. தலைமைகளை அழிப்பதால் மக்கள் போராட்டம் அழிந்து போய்விடுவது இல்லை. மத்திய கிழக்கில் இஸ்ரேலும் வான் மற்றும் ஏவகணைத் தாக்குதல்கள் மூலம் ஹமாஸ் இயக்கத்தின் தலைமையை அழித்தது. ஆனால் ஹமாஸ் இயக்கம் மேலும் வீறு கொண்டு எழுந்தது. மக்கள் ஆதரவோடு பாலஸ்தீன நிர்வாகத்தையும் கைப்பற்றியது.

அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக வியட்நாமிய மக்கள் போராடிய போது, விடுதலைப் போராட்டத்தை வழி நடத்திய “ஹோசிமிங்” போராட்டம் முடிவு பெறும் முன்பே இயற்கை மரணம் அடைந்து விட்டார். அதன் பிறகும் மனம் தளராது ஆறு வருடங்கள் வியட்நாம் மக்கள் போராடி அமெரிக்கப் படையினரை விரட்டி அடித்தார்கள். இந்த வல்லரசு நாடுகள் தங்களுடைய சொந்த அனுபவங்களை ஒரு முறை மீட்டிப் பார்த்தாலே சில விடயங்களை புரிந்து கொள்ள முடியும்.

வரலாறுகள் சொல்கின்ற செய்திகளை கவனத்தில் எடுக்காது தேசியத் தலைவரை குறி வைப்பதற்கு பல ஆயிரம் கோடிகளை சிறிலங்கா அரசு விரயம் செய்து வருகின்றது. “நான் பிரபாகரனின் தலையைக் கோரியிருக்கிறேன்”, “பிரபாகரனின் தலை என்னுடைய காலில் விழ்ந்து பின்புதான் போர் நிற்கும்” என்று சொன்னவர்களும் இந்த நேரத்தில் தவிர்க்க முடியாதபடி நினைவில் வருகின்றார்கள். இப்படிச் சொன்னவர்களின் கதையை வரலாறு பின்பு எப்படி எழுதியது என்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது - ஜ.ப.ர

அனேக நேரங்களில் நான் நல்ல புத்தகங்களைத் தேடிப் போவதுண்டு. சில நேரங்களில் சில நல்ல புத்தகக் கனிகள் தாமாக என் மடியில் வந்து விழுவதுண்டு. அப்படி ஒரு நல் அதிருஷ்டத்தால் என்னிடம் சிக்கிய புத்தகம்தான் "The Kalam effect - My years with the President". பி.எம்.நாயர் எழுதி, ஃபாலி.எஸ்.நாரிமனின் முன்னுரையுடன் ஹார்ப்பர் காலின்ஸும், இண்டியா டுடே குழுமமும் சேர்ந்து இந்த நூலை 2008ல் வெளியிட்டிருக்கிறார்கள்.

அதிலிருந்து சில தகவல்கள்:

கலாமிடம் ஒரு கடிதமும் கவனிக்காமல் போகக்கூடாது. எதுவும் சின்ன விஷயம் இல்லை அவருக்கு. இதில் கறார் ஆனவர். அதிகாரிகள்தான் சொல்ல முடியாமல் தவிப்பார்கள். பணம் கேட்டு எழுதுபவர்களில் இருந்து, பாரத ரத்னா விருதுக்கு மனு செய்பவர்கள் வரை, யாராய் இருந்தாலும் பதில் போட்டே ஆக வேண்டும். (பல கடிதங்களை மறைத்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் நாயர்!)

மாதிரிக்கு ஒரு ஈமெயில். ஆக்ராவிலிருந்து ஒரு சிறுமி அனுப்பியது:

"அங்கிள், எங்கள் பகுதியில் ஒரே ஒரு பூங்காதான் இருக்கிறது. அதில் ஒரே ஒரு ஸீ-ஸா. அது பத்து நாட்களாகப் பழுதான நிலையிலேயே இருக்கிறது; யாரும் கண்டுக்கவே இல்லை".

உடனே கலெக்டருக்கு போன். சில தினங்களில் அந்த சிறுமியிடமிருந்து மீண்டும் ஈமெயில்:

"அங்கிள், ஸீ-ஸா சரியாகி விட்டது. நீங்கள் நல்ல அங்கிள். உங்களை எப்ப பார்க்கலாம்?"

*****

கலாம் என்ன தெய்வப் பிறவியா? ஒரு சில நிகழ்ச்சிகள், கருத்து எதுவும் சொல்லாமல்.

2003 சுதந்திர தினம். ஜனாதிபதி மாளிகைப் புல்வெளியில் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பல துறை வல்லுநர்களுக்கு ஒரு வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் கலாம். மாலை ஐந்தரை மணிக்கு நிகழ்ச்சி. காலையிலிருந்து கொட்டோ கொட்டென்று மழை. நிகழ்ச்சியை உள் அரங்குக்கு மாற்ற முடியாது. ஏனென்றால் உள் அரங்கில் 600 பேர்தா‎ன் அமர முடியும்.. வர வேண்டிய விருந்தினரோ 2000 பேர். கலாமிடம் விஷயத்தைச் சொன்னால் புன்னகைக்கிறார். "என்ன போயிற்று, எல்லாரும் நனையப் போகிறோம், அவ்வளவுதானே?" என்கிறார். நாயரின் பரிதவிப்பைப் பார்த்து, "ஏன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? நான் அங்கே பேசியாகி விட்டது, எல்லாம் சரியாகிவிடும்" என்று வானத்தைச் சுட்டிக் காட்டி புன்னகைத்தபடியே கூறுகிறார். வேறு வழியில்லாமல் அதிகாரிகள் 2000 குடைகளுக்கு ஏற்பாடு செய்து வைக்கிறார்கள். என்ன மாயம்! சாயங்காலம் மழை அறவே நின்று, சூரியன் பிரகாசிக்க ஆரம்பித்து விட்டது. ஆறரை மணிக்கு நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் முடிந்து அவரவர் விடைபெற்றுக் கொண்டு போனார்களோ இல்லையோ, வானம் மறுபடியும் பொத்துக் கொண்டு விட்டது!

முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி வெங்கடசல்லையா, கலாமைச் சந்தித்து விட்டு வந்து ஒரு முறை சொன்னது: "நாயர், என் வாழ்க்கையில் இது முக்கிய அனுபவம். டாக்டர் கலாமுக்கு மிக அருகில் உட்கார்ந்திருந்தேன். இறைத்தன்மையின் அதிர்வலைகள் என்னுள் எதிரொலிப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர் உண்மையிலேயே கடவுளுக்குச் சொந்தமானவர்!"

*****

பொதுவாக உயர் பதவி ஏற்றதும் ஒருவர் எங்கு செல்வார்? அவரது சொந்த ஊருக்குத்தானே? அது மட்டும் அல்லாமல் அடிக்கடி டூர் போட்டுக் கொண்டு, சொந்த ஊர், அல்லது பாண்டிச்சேரி, திருப்பதி அல்லது புட்டபர்த்தி என்று அவரவர் இஷ்ட க்ஷேத்திரங்களுக்குப் போவதும் கூட வழக்கம்தான். கலாம் பதவி ஏற்ற பிறகு எப்போது ராமேஸ்வரம் போனார் தெரியுமோ? இரண்டு ஆண்டுகள் கழித்து! பதவிக் காலத்தில் அவர் ராமேஸ்வரம் சென்றது இரண்டே முறைகள்தான்!

2006 மே மாதம் கலாமின் 52 உறவினர்கள் டில்லிக்கு வந்தார்கள். 90 வயது அண்ணா முதல் 1 1/2 வயது அண்ணா பேத்தி வரை! அவர்கள் ராஷ்டிரபதி மாளிகை வண்டிகளைப் பயன்படுத்தவில்லை. அவர்கள் ராஷ்டிரபதி பவனில் தங்கியிருந்த அறைகளுக்கு பைசா கணக்கு பார்த்து வாடகை கட்டி விட்டார். ஒரு சிங்கிள் டீ கூட அரசாங்கச் செலவில் இல்லை. மொத்தம் அவர்களுக்காக ஆன செலவு 3 1/2 லட்சம் ரூபாயையும் கட்டிவிட்டார் கலாம்!

*****

பக்தி நிறைந்த முஸ்லிம் ஆன அவர், ரம்ஜானை ஒட்டி நடக்கும் இஃப்தார் விருந்து வீண் செலவு என்று நிறுத்தி விட்டார். அதற்குப் பதிலாக அந்த வகை செலவு ஒன்றரை லட்சம் ரூபாயில் 28 அனாதை இல்லங்களுக்கு, அரிசி, பருப்பு, வெல்லம் மற்ற உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கி ‏இருக்கிறார். அது மட்டுமன்றி தன் சொந்தப் பணத்திலிருந்து ஆரவாரம் இல்லாமல் அதே வகையில் செலவிடவும் நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.

*****
காந்திஜியைப் பற்றி ஐன்ஸ்டீன் சொன்னதாகச் சொல்வார்கள். "இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக இந்த உலகில் உலவினார் என்பதை எதிர்கால சந்ததியினர் நம்ப மறுப்பார்கள்" என்று. இது கலாமுக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது.

அரசனை நம்பி... - சொ.ஞானசம்பந்தன்

நாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ள பழமொழி, ''அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே'' என்பது.

ஒரு மனைவிக்கு அறிவுரை சொல்வதாக அமைந்துள்ள இதன் விரிவான அர்த்தமாகக் கொள்ளப்படுவது என்ன?

''ஏ பெண்ணே! அரசன் எல்லா வளங்களும் நிரம்பியவன்; அதிகாரமும், ஆர்ப்பாட்டமும், ஆடம்பரமும் உடையவனாய்ப் பரிவாரங்கள் புடைசூழப் பெருமிதத்துடன் வாழ்கிறான். அவனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், உன் கணவன் வசதிக் குறைவுடன் எளிய வாழ்வு வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பவனாய்த் தோன்றும். ஆகையால், நீ ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு சோகத்துடன் காலம் தள்ளாதே. அரசனை அணுகும் வாய்ப்புக் கிட்டினால் அவனுடைய ஆசை வார்த்தைகளை நம்பிப் புருஷனைப் புறக்கணித்து விடாதே!''

இப்படி அர்த்தப்படுத்திக் கொண்டுதான் ஒரு கவிஞர் பழைய திரைப்படம் ஒன்றில் பாடல் புனைந்திருந்தார்.

"அரசனைப் பாத்த கண்ணுக்குப்
புருசனைப் பாத்தா புடிக்காது
அரசனைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டா
புருசனை நெஞ்சம் மறக்காது."
என்பவை அந்தப் பாட்டின் சில அடிகள்.

இப்படிப் பொருள் கொள்வது, பெண்ணை இழிவுபடுத்துகிறது; அவளின் கற்பை ஐயப்பட வைக்கிறது; கணவனுக்குத் துரோகம் செய்யக் கூடியவள் அவள் என்ற கருத்தைத் தருகிறது.

ஆனால், பழமொழியின் உண்மைப் பொருள் தெரிந்தால் மேற்கண்ட இழி கருத்து நீங்கும். என்ன ஐயா.. அந்த மெய்ப்பொருள் என்றுதானே கேட்கிறீர்கள்? இதோ சொல்கிறேன்.

இங்கே அரசன் என்பது மன்னனைக் குறிக்கவில்லை; மரத்தைச் சுட்டுகிறது. சில ஊர்களின் பெயர்களை (நாகப்பட்டினம்-நாகை, கோயம்புத்தூர்-கோவை ) என்று சுருக்கிச் சொல்வது போல மரப் பெயர்களையும் சுருக்குவது மரபு.

ஆல மரம் - ஆல்
வேல மரம் - வேல் (ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி)
வேப்ப மரம் - வேம்பு
புங்க மரம் - புங்கன்
ஒதிய மரம் - ஒதியன் (ஒதியன் பெருத்தாலும் உத்தரத்துக்கு ஆகாது)
அரச மரம் - அரசன்

குழந்தைப்பேறு இல்லாத மனைவி, அரச மரத்தைப் பல நாள் சுற்றினால் கருத்தரிக்கும் என்பது நம்பிக்கை.

''அரச மரத்தைச் சுற்றியவுடன் அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்'' என்ற பழமொழி அவசரக்காரி ஒருத்தியைக் கிண்டல் செய்கிறது.

இப்போது உண்மைப் பொருளை ஊகித்திருப்பீர்களே! உங்கள் ஊகம் சரி. அரச மரத்தைச் சுற்றினால் போதும், குழந்தை உண்டாகிவிடும் என்று நம்பிக் கணவனின் அருகாமையை தவிர்த்து விடக்கூடாது என்றுதான் பழமொழி எச்சரிக்கிறது.

புலிகளை வடிகட்டும் வரையில் இடம் பெயர்ந்த மக்கள் முகாம்களிலேயே வைக்கப்படுவார்கள்!


புலிகளின் பல உறுப்பினர்கள் பொதுமக்கள் போன்று இடம்பெயர்ந்த மக்களுக்குள் ஊடுருவி இருப்பதினால், அவர்களை வடிகட்டி இனம் காணும் வரையில் இடம் பெயர்ந்த மக்கள் வவுனியா முகாம்களிலேயெ தங்க வைக்கப்படுவார்களென பேரழிவு மற்றும் மனித உரிமை விவகாரகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுர விமானபடை தளம் மீதான தாக்குதலை தலமை தாங்கி நடத்திய புலி உறுப்பினர் வவுனியா நலன் புரி முகாம் ஒன்றில் இருந்து கைது செய்யப்பட்டமை குறிப்பிட தக்கதாகும்.

கனடாவில் மற்றுமோர் தமிழ் இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை!

4947405கனடாவில் மற்றுமொரு தமிழ் இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன கனடாவின் ஸ்கார்புறோ வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கடந்த பத்து நாட்களில் கனடாவில் இரண்டு தமிழ் இளைஞர்கள் பரிதாபமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் டெய்லி மார்ட் எனும் கடைத்தொகுதிக்கு அருகாமையில் வைத்து நேற்று நள்ளிரவு 20வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார் ஐந்துபேரை கொண்ட குழுவொன்றே ஆயுதங்களை கொண்டு குறித்த இளைஞரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அண்மையில் படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்டியன் தனபாலன் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் இந்த இரண்டாவது படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting