Thursday, July 23, 2009

நானு’க்கு எதிரான ‘நாம்’


எகிப்தில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின்(NAM - நாம்) உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 118 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பின் குரலை, உலகம் அவ்வளவு எளிதில் நிராகரித்து விட முடியாது.

ஐக்கிய நாடுகள் சபை, பல்வேறு சந்தர்ப்பங்களில் அமெரிக்காவின் கண்ஜாடைக்கு ஏற்பவே செயல்பட்டு வரும் நிலையில், அணிசேரா நாடுகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போன்று, உலகவங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகிய சர்வதேச அமைப்புக்களின் கருத்துருவாக்கத்தில், வளர்முக நாடுகளுக்கு, உரிய பங்களிப்பு இருக்க வேண்டும், என்றும் மாநாடு வலியுறுத்தியுள்ளது.

உலக பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள சுமையை, வளர்முக நாடுகளின் தலையில் மட்டும் கட்டிவிடக் கூடாது என்றும் மாநாடு கேட்டுக் கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ள அதே வேளையில், பயங்கரவாதத்தை குறிப்பிட்ட மதம், தேசியம், பண்பாடு, இனம் ஆகியவற்றோடு தொடர்புபடுத்தக் கூடாது என்றும் அணி சேரா நாடுகளின் மாநாட்டு அறைகூவல் மிகச் சரியாக குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாதம் என்றாலே அதை, இஸ்லாமிய நாடுகளுடன் தொடர்புபடுத்தும், அமெரிக்காவின் பித்தலாட்டத்திற்கு எதிரானது இது.

25 நாடுகளுடன் துவங்கப்பட்ட அணிசேரா நாடுகள் அமைப்பில் தற்போது, ஆப்பிரிக்க நாடுகள் 53, ஆசிய நாடுகள் 26, லத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்க கண்டத்திலிருந்து தலா ஒரு நாடு என்று உலகின் விரிவானதொரு அமைப்பாக வலிமை பெற்றுள்ளது. ஏகாதிபத்திய நாடு கள், தங்களது சொந்த நலனுக்காக, தங்களுக்குள் முரண்பட்டாலும், வளர்முக நாடுகளைச் சுரண்டுவதில் கூட்டுச் சேர்ந்து கொள்கின்றன. இந்நிலையில், வளர்முக நாடுகளின் குரலாக விளங்குகிற அணிசேரா நாடுகள், மேலும் அர்த்தப்பூர்வமாக செயல்படுவது அவசியமாகிறது.

குறிப்பாக, உலகப் பொருளாதார நெருக்கடி, சுற்றுச்சூழல் பிரச்சனைகள், புவி வெப்பமயமாதல் போன்றவற்றில் பணக்கார நாடுகள், வளர்முக நாடுகளுக்கு எதிராக ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்ளும் நிலையில், வளர்முக நாடுகளிடையே ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் அவ சியமாகிறது. குறிப்பாக பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சீனா மற்றும் ஜி77 நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அணிசேரா நாடுகளின் அமைப்பு கூறியிருப்பது, மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

பன்முக உலகக் கோட்பாட்டிற்கு எதிராக, அமெரிக்க ஏகாதிபத்தியம், ஒற்றைத்துருவ உலகை உருவாக்க துடிக்கிறது. ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களை, தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து நாட்டாண்மை செய்ய முயல்கிறது. இதன், அடாவடிகளைத் தடுத்து நிறுத்த, வலுவான சோசலிச முகாம் இல்லாத நிலையில், வளர்முக நாடுகளின் கூட்டமைப்பாக விளங்கும், அணிசேரா நாடுகளின் அமைப்பு, மேலும் வலிமை பெறுவது அவசியமாகிறது.

உலகின் வல்லரசு “நானே” என்ற அமெரிக்காவின் அகம்பாவத்திற்கு எதிராக, “நாம்”-எனும் குரல் ஒலிக்கட்டும்!

நன்றி: தீக்கதிர்

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting