Wednesday, July 22, 2009

கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது - ஜ.ப.ர

அனேக நேரங்களில் நான் நல்ல புத்தகங்களைத் தேடிப் போவதுண்டு. சில நேரங்களில் சில நல்ல புத்தகக் கனிகள் தாமாக என் மடியில் வந்து விழுவதுண்டு. அப்படி ஒரு நல் அதிருஷ்டத்தால் என்னிடம் சிக்கிய புத்தகம்தான் "The Kalam effect - My years with the President". பி.எம்.நாயர் எழுதி, ஃபாலி.எஸ்.நாரிமனின் முன்னுரையுடன் ஹார்ப்பர் காலின்ஸும், இண்டியா டுடே குழுமமும் சேர்ந்து இந்த நூலை 2008ல் வெளியிட்டிருக்கிறார்கள்.

அதிலிருந்து சில தகவல்கள்:

கலாமிடம் ஒரு கடிதமும் கவனிக்காமல் போகக்கூடாது. எதுவும் சின்ன விஷயம் இல்லை அவருக்கு. இதில் கறார் ஆனவர். அதிகாரிகள்தான் சொல்ல முடியாமல் தவிப்பார்கள். பணம் கேட்டு எழுதுபவர்களில் இருந்து, பாரத ரத்னா விருதுக்கு மனு செய்பவர்கள் வரை, யாராய் இருந்தாலும் பதில் போட்டே ஆக வேண்டும். (பல கடிதங்களை மறைத்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் நாயர்!)

மாதிரிக்கு ஒரு ஈமெயில். ஆக்ராவிலிருந்து ஒரு சிறுமி அனுப்பியது:

"அங்கிள், எங்கள் பகுதியில் ஒரே ஒரு பூங்காதான் இருக்கிறது. அதில் ஒரே ஒரு ஸீ-ஸா. அது பத்து நாட்களாகப் பழுதான நிலையிலேயே இருக்கிறது; யாரும் கண்டுக்கவே இல்லை".

உடனே கலெக்டருக்கு போன். சில தினங்களில் அந்த சிறுமியிடமிருந்து மீண்டும் ஈமெயில்:

"அங்கிள், ஸீ-ஸா சரியாகி விட்டது. நீங்கள் நல்ல அங்கிள். உங்களை எப்ப பார்க்கலாம்?"

*****

கலாம் என்ன தெய்வப் பிறவியா? ஒரு சில நிகழ்ச்சிகள், கருத்து எதுவும் சொல்லாமல்.

2003 சுதந்திர தினம். ஜனாதிபதி மாளிகைப் புல்வெளியில் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பல துறை வல்லுநர்களுக்கு ஒரு வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் கலாம். மாலை ஐந்தரை மணிக்கு நிகழ்ச்சி. காலையிலிருந்து கொட்டோ கொட்டென்று மழை. நிகழ்ச்சியை உள் அரங்குக்கு மாற்ற முடியாது. ஏனென்றால் உள் அரங்கில் 600 பேர்தா‎ன் அமர முடியும்.. வர வேண்டிய விருந்தினரோ 2000 பேர். கலாமிடம் விஷயத்தைச் சொன்னால் புன்னகைக்கிறார். "என்ன போயிற்று, எல்லாரும் நனையப் போகிறோம், அவ்வளவுதானே?" என்கிறார். நாயரின் பரிதவிப்பைப் பார்த்து, "ஏன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? நான் அங்கே பேசியாகி விட்டது, எல்லாம் சரியாகிவிடும்" என்று வானத்தைச் சுட்டிக் காட்டி புன்னகைத்தபடியே கூறுகிறார். வேறு வழியில்லாமல் அதிகாரிகள் 2000 குடைகளுக்கு ஏற்பாடு செய்து வைக்கிறார்கள். என்ன மாயம்! சாயங்காலம் மழை அறவே நின்று, சூரியன் பிரகாசிக்க ஆரம்பித்து விட்டது. ஆறரை மணிக்கு நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் முடிந்து அவரவர் விடைபெற்றுக் கொண்டு போனார்களோ இல்லையோ, வானம் மறுபடியும் பொத்துக் கொண்டு விட்டது!

முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி வெங்கடசல்லையா, கலாமைச் சந்தித்து விட்டு வந்து ஒரு முறை சொன்னது: "நாயர், என் வாழ்க்கையில் இது முக்கிய அனுபவம். டாக்டர் கலாமுக்கு மிக அருகில் உட்கார்ந்திருந்தேன். இறைத்தன்மையின் அதிர்வலைகள் என்னுள் எதிரொலிப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர் உண்மையிலேயே கடவுளுக்குச் சொந்தமானவர்!"

*****

பொதுவாக உயர் பதவி ஏற்றதும் ஒருவர் எங்கு செல்வார்? அவரது சொந்த ஊருக்குத்தானே? அது மட்டும் அல்லாமல் அடிக்கடி டூர் போட்டுக் கொண்டு, சொந்த ஊர், அல்லது பாண்டிச்சேரி, திருப்பதி அல்லது புட்டபர்த்தி என்று அவரவர் இஷ்ட க்ஷேத்திரங்களுக்குப் போவதும் கூட வழக்கம்தான். கலாம் பதவி ஏற்ற பிறகு எப்போது ராமேஸ்வரம் போனார் தெரியுமோ? இரண்டு ஆண்டுகள் கழித்து! பதவிக் காலத்தில் அவர் ராமேஸ்வரம் சென்றது இரண்டே முறைகள்தான்!

2006 மே மாதம் கலாமின் 52 உறவினர்கள் டில்லிக்கு வந்தார்கள். 90 வயது அண்ணா முதல் 1 1/2 வயது அண்ணா பேத்தி வரை! அவர்கள் ராஷ்டிரபதி மாளிகை வண்டிகளைப் பயன்படுத்தவில்லை. அவர்கள் ராஷ்டிரபதி பவனில் தங்கியிருந்த அறைகளுக்கு பைசா கணக்கு பார்த்து வாடகை கட்டி விட்டார். ஒரு சிங்கிள் டீ கூட அரசாங்கச் செலவில் இல்லை. மொத்தம் அவர்களுக்காக ஆன செலவு 3 1/2 லட்சம் ரூபாயையும் கட்டிவிட்டார் கலாம்!

*****

பக்தி நிறைந்த முஸ்லிம் ஆன அவர், ரம்ஜானை ஒட்டி நடக்கும் இஃப்தார் விருந்து வீண் செலவு என்று நிறுத்தி விட்டார். அதற்குப் பதிலாக அந்த வகை செலவு ஒன்றரை லட்சம் ரூபாயில் 28 அனாதை இல்லங்களுக்கு, அரிசி, பருப்பு, வெல்லம் மற்ற உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கி ‏இருக்கிறார். அது மட்டுமன்றி தன் சொந்தப் பணத்திலிருந்து ஆரவாரம் இல்லாமல் அதே வகையில் செலவிடவும் நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.

*****
காந்திஜியைப் பற்றி ஐன்ஸ்டீன் சொன்னதாகச் சொல்வார்கள். "இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக இந்த உலகில் உலவினார் என்பதை எதிர்கால சந்ததியினர் நம்ப மறுப்பார்கள்" என்று. இது கலாமுக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது.

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting