Monday, May 2, 2011

logo designவாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த கட்டடத்தை அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு எப்படி கண்டுபிடித்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஒசாமாவை தாராபோரா மலைத் தொடரின் குகைகளில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் (un manned ariel vehicles) இரவு பகலாக தேடி வந்தன. இதற்கான 50க்கும் மேற்பட்ட உளவு விமானங்கள் இந்த மலைத் தொடரை சல்லடை போட்டு தேடின. ஆனாலும் ஒசாமா சிக்கவில்லை.

அதே போல சாட்டிலைட் தொலைபேசியில் ஒபாமா பேசுகிறாரா என்று அமெரிக்க ராணுவ செயற்கைக் கோள்கள் voice recognition software உதவியோடு உலகம் முழுவதும் இந்த ரக தொலைபேசிகளின் உரையாடல்களை கண்காணித்து வந்தன. ஆனால், ஒரு சத்தத்தையும் காணோம்.

இந் நிலையில் ஏராளமான உடல் உபாதைகளுடன் தவித்து வந்த ஒசாமா நிச்சயம் பாகிஸ்தானுக்குள் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அமெரிக்கா. இதனால் பாகிஸ்தானுக்குள் ஒசாமாவைத் தேடும் பணியை தீவிரமாக்கியது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவு தான் ஒசாமாவை பத்திரமாக பதுக்கி வைத்திருக்கிறது என்று தெரிய வந்தாலும், அதை பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் மறுத்தே வந்ததால், கெஞ்சிப் பார்த்து ஓய்ந்து போன அமெரிக்கா, பாகிஸ்தான் ஆட்சியாளர்களை மிரட்டவும் ஆரம்பித்தது.

லிபியாவுக்குள் குண்டுவீசி அந் நாட்டு அதிபர் கடாபிக்கே குறி வைக்க ஆரம்பித்துள்ள அமெரிக்கா, இதே நிலைமை உங்களுக்கும் விரைவில் ஏற்படும் என்றும் மிரட்டியதையடுத்து ஒசாமா குறித்த சில தகவல்களை அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தந்ததாகத் தெரிகிறது.

இந்த தகவல்களை முன் வைத்து சிஐஏ நடத்திய மாபெரும் உளவு-தேடுதல் வேட்டையில் தான் ஒசாமா கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் கிடைத்த தகவல்களை வைத்து ஒசாமாவின் வளையத்துக்குள் உள்ள சிலரை அமெரிக்கா கண்காணிக்க ஆரம்பித்தது. இந்த வளையத்தில் சில சிஐஏ பிரிவினரையும் ஊடுருவ வைத்தது.

அவர்கள் மூலம் ஒசாமாவுக்கு கடிதங்கள் எடுத்துச் செல்லும் நபரை அடையாளம் கண்டது சிபிஐ. ஒசாமாவுக்கான அந்தக் கடிதங்கள் புனைப் பெயர்களில் செல்வதை அமெரிக்கா கண்டுபிடித்தது.

இந்த நபர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்போடாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பதை கடந்த ஜனவரியிலேயே சிஐஏ கண்டுபிடித்தது.

அந்த நபரிடம் விசாரணை நடத்தினால் கூட ஒசாமா அலர்ட் ஆகிவிடுவார் என்பதால், அவரிடம் எந்தவித பேச்சுவார்த்தையையும் வைத்துக் கொள்ளவில்லை அமெரிக்கா.

அந்த நபர் வசித்த வீடு 18 அடி உயரம் கொண்ட மிக உயர்ந்த சுற்றுச் சுவர்கள் கொண்ட 3 மாடிகள் கொண்ட வீடாகும். அந்த வீட்டைப் பார்த்தவுடனேயே அமெரிக்காவின் சந்தேகம் மேலும் வலுத்தது. அப் பகுதியில் உள்ள மற்ற வீடுகளை விட 8 மடங்கு மிக அதிகமான பரப்பளவில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது. மேலும் 2005ம் ஆண்டில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

பல கோடி மதி்ப்புடைய அந்த வீட்டின் தொலைபேசி எண்ணை அறிய அமெரிக்க உளவுப் பிரிவினர் முயன்றபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வளவு பெரிய வீட்டில் தொலைபேசியே இல்லை. மிகப் பெரிய பங்களாவில் ஒரு தொலைபேசி இணைப்பு கூட இல்லாதது ஏன் என்ற சந்தேகம் வரவே, அந்த வீட்டில் இண்டர்நெட் இணைப்பாவது இருக்கிறதா என்று விசாரித்தபோது அதுவும் இல்லை என்று தெரியவந்தது.

மேலும் அந்த வீட்டினர் குப்பைகளைக் கூட வெளியில் கொட்டாமல், தங்களது காம்பவுண்டுக்குள்ளேயே எரித்து வந்ததையும் அமெரிக்க உளவுப் பிரிவினர் பல மாதங்களாக கண்காணித்தனர்.

அந்த வீட்டில் கடிதங்கள் கொண்டு சென்ற நபரும் அவரது சகோதரரின் குடும்பங்கள் தவிர இன்னொரு குடும்பமும் இருப்பதும் தெரியவந்தது. அந்தக் குடும்பம் பின் லேடனின் குடும்பம் என்ற முடிவுக்கு வந்த சிஐஏ, இந்த வீட்டை சோதனையிடுவது குறித்து முடிவு செய்தது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையில் 5 உயர் மட்டக் கூட்டங்களும் நடந்தன.

அதில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்குத் தெரிந்துவிடாமல் இந்த ஆபரேசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு தகவல் கிடைத்தால் ஒசாமாவை காப்பாற்றிவிடுவார்கள் என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டது.

இதனால் கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் கூட, இந்த ஆபரேசனை நாமே நடத்தி முடிப்பது என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தது. இந்த வீட்டில் ஒசாமா தனது இளைய மனைவியோடு இருப்பதை அப்போடாபாத் நகரிலேயே முகாமிட்டிருந்த சிபிஐவின் உளவாளிகள் மீண்டும் திட்டவட்டமாக கடந்த வாரம் உறுதிப்படுத்தவே, அந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்த கடந்த வெள்ளிக்கிழமை ஒபாமா அனுமதி தந்தார்.

இதையடுத்து நேற்று நள்ளிரவு 1.20 மணியளவில்ன் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்திலிருந்து சில ஹெலிகாப்டர்களில் கிளம்பிய அமெரிக்கப் படையினரும், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து கிளம்பிய ஒரு படையும் இந்த வீட்டை முற்றுகையிட்டன.

மிகச் சிறிய அளவிலான இந்தப் படை தனது பயங்கர தாக்குதலைத் தொடங்க, ஒசாமா பின் லேடனின் பாதுகாவலர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந் நிலையி்ல் ஒசாமா பின் லேடனே நேரடியாக அமெரிக்கப் படைகளுடன் மோதியுள்ளார்.

இதில் உடல் துளைக்கப்பட்டு ஒசாமா பின் லேடன் அந்த இடத்திலேயே பலியானார். இதில் ஒரு குண்டு ஒசாமாவின் கண்ணை துளைத்துக் கொண்டு மூளையை சிதறடித்தது. அவருடன் அவரது மகன், ஒரு பெண் உள்பட 5 பேரும் பலியாயினர்.

40 நிமிடத்தில் இந்த ஆபரேசனை முடித்துவிட்டு ஒசாமாவின் உடலை தூக்கிக் கொண்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் கிளம்பின.

இதில் ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட, அந்த ஹெலிகாப்டரை அங்கேயே விட்டுவிட்டு மற்ற ஹெலிகாப்டர்கள் பறந்தன. தரையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு, உளவு காரணங்களுக்காக மற்ற ஹெலிகாப்டர்கள் குண்டுவீசித் தகர்த்துவிட்டு, ஒசாமாவின் உடலோடு ஆப்கானிஸ்தான் நோக்கிப் பறந்தன.

இந்தத் தாக்குதலை நடத்தியது எந்தப் படை என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. ஆனாலும் U.S. Navy SEALs அதிரடிப் படை தான் இந்த ஆபரேசனை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.

இறந்தது ஒசாமா தானா என்பதை facial recognition மற்றும் டிஎன்ஏ சோதனைகள் மூலம் அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

இந்த முழு ஆபரேசனையும் அமெரிக்காவிலிருந்து ஒருங்கிணைத்த சிஐஏ குழுவுடன் அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் முழு அளவில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting