விடுதலைப்புலிகளின் விமானங்கள் உருவாகிய விதத்தினைக் காண்பிக்கும் வீடியோ வடபகுதி மோதலின்போது இராணுவத்தினருடன் தங்கியிருந்து செய்திகளை வழங்கிய ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊடகவியலாளர்
சமன்குமார விக்கிரமரட்னவினால் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை போட்டுக் காண்பிக்கப்பட்டது.
விடுதலைப்புலிகளினால் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய ஒளிப்பதிவு நாடாக்களை தான் வன்னியில் மீட்டதாக கூறியே சமன்குமார இந்த வீடியோவினை அங்கு காண்பித்தார். விடுதலைப்புலிகளால் பதிவு செய்யப்பட்டதாக கூறி சமன்குமாரவினால் காண்பிக்கபபட்ட அந்த ஒளிப்பதிவு தொகுப்பில் வெளிநாடு ஒன்றில் விமான உற்பத்தி நிறுவனம் ஒன்றின் சிறு விமானமொன்று தயாரிக்கப்பட்டு அதன் பாகங்கள் பொருத்தப்பட்டு விமானம் முழுவடிவத்தினைப் பெறுகின்றது. பின்னர் அந்த விமானம் பலபாகங்களாகப் பிரிக்கப்பட்டு கொள்கலன் ஒன்றில் அடைக்கப்படுகிறது. அந்த விமானம் நீலம் வெள்ளளை நிற வர்ணத்தில் அமைந்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் வெளிநாட்டவர் இருவருடன் ஆசியாவைச் சோ்ந்த இருவர் உள்ளனர். அவர்களை விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர்களென சமன்குமார இதன்போது குறிப்பிட்டார். பின்னர் இந்தக் கொள்கலனில் விமானம் அடைக்கப்பட்டது. அந்தக் கொள்கலன் பின்னர் வன்னிப்பகுதியில் பிரிக்கப்பட்டு விமானத்தின் பாகங்கள் பொருத்தப்படுகின்றது. விமானம் முழுவடிவம் பெற்று அது பரீட்சித்துப் பார்க்கப்படுகின்றது. வீதியொன்றில் இது பரீட்சித்துப் பார்க்கப்பட்டு விமானம் பறக்கின்றது. இந்த வீதியை ஏ 9 வீதியென சமன்குமார குறிப்பிட்டார். பின்னர் விமானத்தை நிறுத்துவதற்குரிய கூடாரம் அமைக்கப்பட்டு அதனுள் நிலத்தடி அறைகள் அமைக்கப்படுகின்றது. விமானத்திற்கு பச்சை நிற வர்ணம் பூசப்பட்டு அது இராணுவ போர் விமானங்கள் போல காட்சி தருகின்றது. அதன் பின்னர் விமானம் வானில் பறக்க விடப்படுகின்றது. இவ்வாறு பறக்க விடப்பட்டு விமானத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட வீடியோக்களில் கீழே காடு போன்று பச்சைப் பசேல் என்ற இடம் தெரிந்தது. பின்னர் காடாக இருந்த இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு விமான ஓடுபாதை அமைக்கப்பட்டு அதற்குரிய சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டது. இதன்பின்னர் சர்வதேச விமான ஓடுபாதைகளை ஒத்த ஓடுபாதையில் அந்தச் சிறுவிமானத்தை சீருடை அணிந்த இருவர் இயக்கிப் பறக்கின்றனர். விமான ஓடுபாதை அமைந்த பகுதியை முல்லைத்தீவு எனவும் விமானத்தை இயக்கியவர்கள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் எனவும் சமன்குமார குறிப்பிட்டார். பின்னர் அந்த விமானங்கள் கொழும்பில் தாக்குதல் நடத்தியபோது ராடர் மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும் சமன்குமார காண்பித்தார். அவற்றை விடுதலைப்புலிகளின் ஒளித்தொகுப்புடன் தான் இணைத்ததாகவும் சமன்குமார தெரிவித்தார். எனினும் இந்த வீடியோ இங்கு முழுமையாக ஒளிபரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
0 கருத்துரைகள்:
Post a Comment