மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இன்னும் இரண்டொரு வருடங்களுக்குள் கவிழ்ந்து விடும் என்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிர்வு கூறியுள்ளார். |
தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விருந்துபசாரமொன்றில் வைத்தே அவர் மேற்கண்டவாறான கருத்தை வெளியிட்டதாக அதில் கலந்து கொண்டிருந்த எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார். அமைச்சரவைப் பொறுப்புகளின் அதிகாரங்கள் பறித்தெடுக்கப்பட்டமை, முக்கிய அமைச்சர்களை சிரேஷ்ட அமைச்சர்களாக்கி ஓரங்கட்டியமை, கட்சிக்குள் வலுத்து வரும் தலைமைத்துவ சர்வாதிகாரம் மற்றும் அரசாங்கத்தினுள் ஜனாதிபதியின் எதேச்சாதிகார போக்கு என்பனவே அரசாங்கம் கவிழ்வதற்கான காரணங்களாக அமையலாம் என்று அவர் சுட்டிக் காட்டுகின்றார். 2001ம் ஆண்டில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் கட்சி தாவி ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமமானது போல் இல்லாவிட்டாலும், எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் அதிருப்தியாளர்கள் கட்சி மாறுவதைத் தடுத்து நிறுத்த முடியாது போகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தின் எதேச்சாதிகார போக்கு மற்றும் மோசடிகள் காரணமாக நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்களும், சம்பள உயர்வின்மை காரணமாக அரசாங்க ஊழியர்களும் அரசாங்கத்துடன் முரண்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இவ்வாறான நெருக்கடிகள் காரணமாக எதிர்வரும் இரண்டொரு வருடங்களுக்குள் அரசாங்கத்திற்குள் கருத்து மோதல் வலுத்து கவிழ்ந்து விடும் என்றவாறு அவர் எதிர்வு கூறுகின்றார். அது மாத்திரமன்றி ரணில்- சஜித் கருத்தொற்றுமை காரணமாக தற்போது இளம் தலைமுறையின் வாக்காளர்கள் மாத்திரமன்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் கூட ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாய்வதற்குத் தயாராக இருப்பதையே நாட்டின் அண்மைய நிகழ்வுகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. |
0 கருத்துரைகள்:
Post a Comment