Wednesday, January 9, 2008

கருணா அம்மான் கலக்குவாரா?

குடிவரவு விதிகளை மீறிய குற்றச்சாட்டுகளுக்காக கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள கருணா அம்மான் (விநாயகமூர்த்தி முரளிதரன்) , தனக்கெதிராக மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுகள் எவையும் கொண்டுவரப்படுமிடத்து அவற்றைச் சந்திக்க விரும்புவதாக தெரிய வருகிறது. தன்னைச் சந்தித்த லண்டன் தமிழ் ஊடகவியலாளர் ; ஒருவரிடம் இதனைத் தெரிவித்த கருணா அம்மான் , சர்வதேச மன்னிப்புச் சபை அல்லது மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு போன்ற மனித உரிமை நிறுவனங்கள் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் எவற்றையும் தனக்கெதிராக கொண்டுவருவதை தான் விரும்புவதாகவும் , கிழக்கு மாகாணத்தில் , தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெறிப்படுத்தலில் அவர்களின் புலனாய்வுப் பொறுப்பாளர் ச.பொட்டுவின் திட்டத்தின்படியே சகல மனித உரிமை மீறல் சம்பவங்களும் நடைபெற்றிருந்ததை தன்னால் நிரூபிக்க முடியுமெனவும் கூறியுள்ளார். அத்துடன் சமாதான காலத்தில் தான் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்து செல்ல நேரிட்ட காரணங்களிலொன்றாக, தனக்குத் தெரியாமல் வன்னித் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் மட்டக்களப்பில் நடைபெற்றிருந்ததை தான் பகிரங்கமாக சுட்டிக் காட்டியதாகவும் கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கெதிராக பகிரங்க விசாரணைகள் மேற்கொள்ளப்படுமிடத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மிகமோசமான மனித உரிமை மீறல்களில் நேரடியாகப் பங்கெடுத்த பலர் தற்போது அகதி அந்தஸ்து பெற்று பிரித்தானியா உட்பட பல ஜரோப்பிய நாடுகளில் வசித்துவருவதால் இவர்களையும் சாட்சியாக அழைக்குமாறு தான் கோரவுள்ளதாகவும் , அப்போது கிழக்குமாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்டிருந்த முஸ்லீம் , சிங்கள மக்கள் மீதான படுகொலை முயற்சிகள் அனைத்தும் தலைவருடையதும் அவரது புலனாய்வுப் பொறுப்பாளரதும் நேரடி நெறிப்படுத்தலிலேயே நடைபெற்றிருந்ததை தன்னால் நிரூபிக்கமுடியுமென நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக யூன் 1990ல் 600 க்கும் அதிகமான முஸ்லீம் சிங்கள பொலிசார் நிராயுதபாணிகளாக்கப்பட்ட பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் , ஓகஸ்ட் 1990ல் காத்தான்குடி பள்ளிவாசலில் 25 குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் அதிகமான அப்பாவி முஸ்லீம் பொது மக்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் , ஒக்டோபர் 1992ல் பொலனறுவையில் 172 சிங்களப் பொது மக்கள் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவமும் , டிசம்பர் 1999ல் அம்பாறையில் பெண்கள் குழந்தைகள் உட்பட 96 அப்பாவிச் சிங்களப் பொது மக்கள் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவமும் , தேசிய தலைவரின் நேரடி உத்தரவுப்படி புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மானினால் வன்னியிலிருந்து அனுப்பப்பட்ட புலனாய்வுத் துறையைச் சேர்ந்த புலி உறுப்பினர்களாலேயே நடாத்தப்பட்டதாக ஆதாரங்களுடன் நிரூபிக்கமுடியுமென கருணா அம்மான் நம்பிக்கை தெரிவித்ததாக தெரியவருகிறது.

மேலும் ; மறைந்த மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவியார் அடேல் பாலசிங்கம் அவர்கள் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்த காரணத்தால் தனக்கு எதிரான விசாரணைகளின் போது அவரையும் விசாரணைக்குள்ளாக்குமாறு கருணா அம்மான் கோரவுள்ளதாக அறியப்படுகிறது. கருணா அம்மானின் மனைவி தற்போது லண்டனில் தங்கியிருப்பதாலும் , அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் ஒரு முக்கிய பதவியினை முன்னர் வகித்திருந்த காரணத்தாலும் , அடேல் பாலசிங்கத்தின் 'பங்களிப்பு ' பற்றிய பல தகவல்களை அவர் விசாரணைகளின்போது பகிரங்கப்படுத்துவார் என தெரியவருகிறது.

மனித உரிமை மீறல்கள் குற்றங்களுக்காக கருணா அம்மானை 'கழுவில் ஏற்ற' புலிகளின் புலம்பெயர் ஆதரவாளர்கள் பலர் ஆரம்பத்தில் அந்தரித்தபோதும் , வன்னியிலுள்ள புலித் தலைமையின் வற்புறுத்தலைத் தொடர்ந்து அதனைக் கை விட்டிருந்தனர். ஆனால் கருணா அம்மானுக்கெதிராக குற்றச்சாட்டுகளை கொண்டு வருவதன் மூலம் அகில உலகிலும் ஆகக் கூடிய மனித உரிமை மீறல்களைப் புரிந்த பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை மேலும் துரிதப்படுத்த முடியும் என சர்வதேச சமூகம் கருதியதால் கருணா அம்மானுக்கு எதிரான 'போர்க் குற்றங்கள் ' பற்றிய விசாரணைகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இது பிரித்தானியாவிலுள்ள புலிகளின் ஆதரவாளர்களை பெரும் பிரச்சினையில் சிக்க விட்டுள்ளதாக தெரிய வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனின் அறிவுறுத்தலைமீறி 'அணுவும் அசையாது ' என்பது அனைவருக்கும் தெரிந்துள்ள நிலையில் கருணா அம்மானுக்கு எதிரான விசாரணைகள் தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச ரீதியில் மேலும் பலவீனப்படுத்துமெனவே பரவலாக நம்பப் படுகிறது.

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

 
Cheap Web Hosting